'கடல் வழியாக வந்த தாய் மற்றும் 2 மகன்கள்'... 'காட்டிக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்' ... சென்னை அருகே பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடல் மார்க்கமாக படகு மூலம் மாமல்லபுரம் வந்த தாய் மற்றும் அவரது 2 மகன்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் ஓ.எம். ஆர். சாலை முழுவதும் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு மகன்களுடன் சென்னை ராயபுரத்தில் இருந்து, கடல் வழியாக படகு மூலம் மாமல்லபுரம் வந்து, இங்குள்ள மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே வட சென்னை பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், ராயபுரத்தை சேர்ந்த தாயும், மகனும் வந்து தங்கிய தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், படகு மூலம் பெண் உள்பட 3 பேர் சென்னையில் இருந்து முறைகேடான பயணம் செய்து வந்து தங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்த பெண் தங்கியுள்ள வீட்டில் உள்ள மூன்று பேரையும் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் அந்த வீட்டின் முகப்பில் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்