'அந்த அட்டைப் படத்துல... 'தெருக்குரல் அறிவு' மட்டும் தான் இருக்கணும்'!.. ரோலிங் ஸ்டோன் கொடுத்த ஷாக்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்'எஞ்சாய் எஞ்சாமி' புகழ் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூடியூபில் வெளியானது.
இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத, தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். ஏ. ஆர். ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. முதலில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும், போகப் போக இந்த பாடல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பரவி, உலக அளவில் மெகா ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து, திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை குவித்தது.
இப்போது வரை இந்த பாடல் யூடியூபில் 30 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு, இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில் தான், ரோலிங் ஸ்டோன் (Rolling Stone) என்ற பத்திரிகை மிகவும் பிரபலமான பாடல்களை பாடியவர்களை அங்கீகரிக்கும் விதமாக, அவர்களின் நேர்காணலையும், புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடும். அந்த வகையில், 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலைப் பாடிய சந்தோஷ் நாராயணன் மகள் தீ படத்தையும், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீயே ஒளி' பாடலைப் பாடிய ஷான் வின்செண்ட் படத்தையும், தனது ஆகஸ்ட் மாத பதிப்பின் அட்டைப் படத்தில் Rolling Stone வெளியிட்டது.
ஆனால், மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களின் பாடலாசிரியரான தெருக்குரல் அறிவு அட்டைப் படத்தில் இடம்பெறாதது பேசுபொருளாக மாறியது. தெருக்குரல் அறிவு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அதற்கு வலு சேர்க்கும் வகையில், திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்டவர்கள் அறிவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். தமிழ் சினிமா மட்டுமின்றி, தமிழ்நாட்டு அரசியல் தளத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகிய நிலையில், இப்போது ரோலிங் ஸ்டோன் அட்டைப்படத்தில், தெருக்குரல் அறிவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்