‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் மனைவியின் வளைகாப்பிற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற ஆங்கில நாளிதழ் நிருபர் மற்றும் அவரது தாயார் உயிரிழந்துள்ளனர். தங்கை மற்றும் அவரது குழந்தை காயமடைந்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (32). இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில செய்தித்தாளில் திருப்பூர் மாவட்ட நிருபராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கர்ப்பமான அவருடைய மனைவிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார். தலைப்பிரசவம் என்பதால் மிகவும் ஆர்வமாக இருந்த ராஜசேகரன், அதற்கான பத்திரிக்கையை அடித்து உறவினர்களை அழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நிருபர் ராஜசேகரன் தனது தாயார் ஜமுனா ராணி (52), தங்கை பானு பிரியா (30) , தங்கையின் குழந்தை இன்பநிதிலன் (2) ஆகியோருடன் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அப்படியே அழைப்பிதழ் கொடுக்கவும் நினைத்து, தனது காரில் சென்று இருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வழியில் அவிநாசி அடுத்த நரியம்பள்ளி அருகே வரும் போது, வளைவில் எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் தாய் ஜமுனா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த உயிருக்கு போராடிய ராஜசேகரன், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தங்கை மற்றும் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ராஜசேகரின் தாயின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிருபர் ராஜசேகரன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் பத்திரிகையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ACCIDENT, REPORTER, MOTHER, SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்