'பளபளக்கும் சப்வே'... 'சென்னை மக்களே இந்த சுரங்கப்பாதையை நியாபகம் இருக்கா'?... அட்டகாசமான தோற்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மக்களையும், சென்னையின் முக்கிய இடங்களையும் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து கொஞ்சமும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்குச் சென்னை மக்களுக்கும், சென்னையின் முக்கிய இடங்களுக்குமான பிணைப்பு என்பது அதிகம். அந்த வகையில் சென்னையின் முக்கிய சுரங்கப்பாதையான அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னையின் மிகப்பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்குக் கீழே அமைந்து உள்ளது. தினசரி அதிக மக்கள் பயன்படுத்தும் இந்த சுரங்கப்பாதையானது, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு கட்டமைப்புகளில் இருப்பது போன்று அழகிய கிரானைட் தளம், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள், புதிய விளக்குகளுடன் சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத்தளத்திற்குச் சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த சுரங்கப்பாதையானது காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும் இந்த அண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது. மேலும் வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணாசாலை ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணிப்பதுடன் சாலையை எளிதில் கடக்கலாம்.

இதற்கிடையே புதுப்பொலிவுடன் மாறியுள்ள இந்த சுரங்கப்பாதையை, நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஓட்டுபவர்களிடம் இருந்து காத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மற்ற செய்திகள்