ஜெய்பீம் சர்ச்சை.. “உள்நோக்கம் இருக்குமோ.. சந்தேகம் ஏன் வந்தது?”.. பாண்டே சொன்ன விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பிகைண்ட்வுட்ஸ் நெறியாளர் ஆவுடையப்பன், அண்மையில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவை நேர்காணல் செய்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அந்த விவாதத்தின் போது ஜெய்பீம் சர்ச்சை குறித்தும் பேசினார்கள்.

Advertising
>
Advertising

ஆவுடையப்பன், ஜெய்பீம் குறித்து சில கேள்விகளை ரங்கராஜ் பாண்டேவிடம் முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சீமான், ஜெய்பீம் காலண்டர் சர்ச்சை குறித்து பேசும் போது, அக்னி கலசம் என்பது வன்னியர்களின் சிம்பல் என்பது ஊரறிந்த விஷயம். தெரியாமல் வைத்திருக்கலாம். இருந்தாலும் சூர்யா வந்து பிரச்சனையை முடிக்கத்தான் பார்ப்பார். ஆரம்பிக்க வேண்டும் என்ற டைப் ஆள் இல்லை.  இதை பெரிதாக்க வேண்டாம் என்று சீமான் கூறினார். திருமாவளவன் கூறும் போது, ஏதோ ஒரு வகையில் ஏதேச்சையாக நடந்துவிட்டது. அவர்களும் தவறை திருத்திவிட்டார்கள். ஆனால் தேவையில்லாமல் இதை அரசியல் செய்கிறார்கள்.  தேவையில்லாமல் அரசியல் போய் கொண்டிருக்கிறது. ஓட்டுக்காக இப்படி செய்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார். நீங்கள் (பாண்டே) ஓட்டுக்கான விஷயம் இதில் நடந்து கொண்டிருக்கிறது. தெரிந்தே கலசம் வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’ என்று ஆவுடையப்பன் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜ் பாண்டே, ‘இதை ஓட்டுக்கான விஷயமாக நான் பார்க்கவில்லை. நேரடியாக அரசியல்வாதி யாரும் இதில் தொடர்பில் இல்லை. ரியாக்சன் தான் அரசியல்வாதிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக்சன் யாரும் கொடுக்கவில்லை. உடனடியாக தேர்தலும் இல்லை. நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாக்கி உள்ளது. அதில் எதுவும் பிரதிபலிக்கப்போவது இல்லை’ என்றார்.

அப்போது ஆவுடையப்பன் பேசும் போது, ‘10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை மேட்ச் செய்வதற்காக  இப்படி செய்கிறார்கள் என்று திருமாவளவன் கூறுகிறாரே’ என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ரங்கராஜ் பாண்டே, ‘அரசியல்வாதிகளால் ஆக்ட் செய்யப்பட்ட விஷயம் அல்ல.. அரசியல்வாதிகளால் ரியாக்ட் செய்யப்பட்ட விஷயம். சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் இருந்து தான் இது கிளப்புது என்பதால், பின்னாடி ஏதாவது அரசியல் ஆக்கப்படலாம். ஆனால் அவர்களுக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் சூர்யா இருக்கிறார். இந்த பக்கம் நீதிபதி சந்துரு இருக்கிறார். இயக்குனர் ஞானவேல் இருக்கிறார், இவர்களை வைத்து அரசியல் பார்க்க முடியாது. பிற விஷயங்களை தான் பார்க்க வேண்டும். ஓட்டு விவகாரமாகவும் இதை பார்க்க முடியாது. கவனக்குறைவாக இது நடந்திருக்கலாம்.

சாதாரணமாக புதுமுக இயக்குனரே படம் பண்ணும் போது கவனமாக இருக்கிறார்கள். ஞானவேல் மாதிரி நல்ல தெளிவான இயக்குனர், சூர்யா மாதிரி சென்செட்டிவான நடிகர்கள், அவர்கள் எல்லாம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பார்த்து இருக்க வேண்டும். தெரியாமல் நடந்துவிட்டது என்று சிறுபிள்ளைகள் போல் சொல்ல முடியாது. இதில் தனிநபர்கள் செய்வதற்கும், அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் செய்வதற்குமான வித்தியாசம் தான் இது.

சண்டியர் என ஒரு படம் கமல்ஹாசன் நடிப்பில் உருவானது பெரிய பிரச்சனை கிளம்பியது. ஆனால் அதே சண்டியர் என பெயரில் 3 வருடம் கழித்து ஒரு படம் வந்தது. யாரும் அதை கேட்கவில்லை. சண்டியர் என்பதை யார் சொல்கிறார் என்பதே இங்கு பிரச்சனை. பெரிய விஸ்வரூபம் எடுக்கிறது.

இதேபோல் உதாரணமாக  முஸ்லிம்கள் பாகிஸ்தான் போங்க என்று பாஜகவிலோ அல்லது இந்து அமைப்பிலோ நான்காவது ஐந்தாவது  கட்ட தலைவர்கள் சொன்னால் சாதாரணமாக விட்டுவிடலாம். அதை அமித்ஷா சொன்னால் விட முடியாது. எனவே விஷயத்தை யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம். இது அரசியல் நோக்கம் இல்லை. கவனக்குறைவாக நடந்திருக்கலாம். அதை சரி செய்திருக்க வேண்டியது அவர்களின் கடமை. ரொம்ப பெரிய விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். எனவே உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியது வந்துவிட்டது’ என்று ரங்கராஜ் பாண்டே கூறினார்.

SURIYA, JAIBHIM, RANGARAJPANDEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்