'பசிக்காக இரையை தேடி வந்த மயில்கள்'... 'நெல்லில் இருந்த விஷம்'... நெஞ்சை உருக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரை தேடி வந்த தேசியப் பறவையான மயில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. இதனால் பல நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி, மாவட்டத்தில் பரவலாக விவசாயப் பணிகள் நடைபெற்றன. போதுமான நீர் கிடைத்ததால் விவசாயமும் நல்ல முறையில் நடைபெற்றது. இதனால் பல பறவைகள் இரைக்காகவும் இனப் பெருக்கத்திற்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் கிராமத்தில் உள்ள வயல்களிடையே ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போது வனத்துறையினர் கண்ட காட்சி அவர்களை அதிரச்செய்தது. வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. இதில் ஆண் மயில்கள் 6 பெண் மயில்கள் 6 என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த மயில்களின் உடல்களை ஆய்வு செய்தனர். அதில் உயிரிழந்த மயில்கள் அனைத்தும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அறுவடைக்குத் தயாராகி வரும் நெற்பயிர்களை எலிகளும் மயில்களும் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக, விவசாயி கோபி என்பவர் பூச்சி மருந்து கலக்கப்பட்ட நெல் தானியங்களை வயல்வெளிப் பகுதியில் தூவி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மயில்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோபி கைது செய்யப்பட்டார்.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 1-ல் இடம்பெற்றுள்ள தேசியப் பறவையான மயில்களை வேட்டையாடுவதோ, அவற்றின் உயிருக்குக் கேடு விளைவிப்பதோ கடும் குற்றமாகும். இதற்கு 3 முதல் 7 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்க இடமுள்ளது. எனவே, விவசாயிகள் வயல்வெளிகளைக் காக்க இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடாமல் வேலி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

PEACOCKS, KILLED, RAMANATHAPURAM, FARMER, POISONED CEREALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்