"நான் பேசுனா எரியுதா... அப்படித்தான்யா பேசுவேன்... ஸ்டைலா... கெத்தா...கால் மேல கால்போட்டு... எட்றா வண்டிய கோட்டைக்கு..." 'ரஜினி' கிரீன் சிக்னல் டூ பாலிடிக்ஸ்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் என்ட்ரி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், எத்தனையோ சர்ச்சைகளைத் தாண்டி, பெரியார் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காத ரஜினியின் போக்கு, அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டதையே எடுத்துக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 ஆண்டுகளாக காத்திருந்த அவரது ரசிர்களுக்கு, தான் அரசியலுக்கு வருவது உறுதி என 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனிப்பான செய்தியை அறிவித்தார் ரஜினிகாந்த். சில பேர் அரசியலில் தான் தனித்து தெரிவதற்காக சர்ச்சையாக பேசுவது உண்டு. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ரஜினி கருணையாக பேசினாலே அது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறி விடுகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

ரஜினியும்... சர்ச்சை பேச்சுக்களும்...

கோவா திரைப்பட விழாவில் விருது வாங்கிவிட்டு திரும்பும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார். அப்போது, '2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவிகிதம் அதிசயம் நிகழ்த்துவார்கள்' எனக் கூறியிருந்தார். அந்த 'அதிசயம் நிகழ்த்துவார்கள்' என்ற வார்த்தை அடுத்த 2 மாதங்களாக தமிழகத்தை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட அதுகுறித்து பேசாத அரசியல் பிரமுகர்களே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த வார்த்தை அனைவரையும் தூண்டி விட்டதாகவே தெரிகிறது.

நம்பிக்கை வீண் போகாது

அது மட்டுமில்லாமல் தர்பார் பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், 'ரஜினிகாந்த் என்கிற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு சூட்ட வேண்டும் என இயக்குநர் பாலச்சந்தர் விரும்பி நம்பிக்கையோடு அந்தப் பெயரை எனக்கு சூட்டினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போன்று தமிழக மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது' என்று கூறினார். அதற்கு அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். அந்த அதிர்வு அந்த அரங்கத்தில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் எதிரொலித்தது.

நாட்டுக்கே பேராபத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில், சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை கண்டித்து அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். போட்டி நாள் அன்று போராட்டம் தீவிரமடைய போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த தடியடியின் போது போலீஸ்காரர் ஒருவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ரஜினிகாந்த், 'சீருடையில் இருந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே பேராபத்து. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் காலா படத்தில் அரசியல் இருந்தாலும் அது அரசியல் படம் அல்ல என்று தெரிவித்திருந்தார்.  அரசியலுக்கு தான் வரும் காலம் இன்னும் வரவில்லை என்றும் ''நல்ல நேரம் வரும்'' அப்போது களத்தில் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய ரஜினி பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சியினரும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த நேரத்தில், ரஜினிகாந்த் வழக்கத்திற்கு மாறாக தனது குரலை உயர்த்தியுள்ளார். எப்பொழுதும் பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் யார் மனதும் புண்படக்கூடாது என பேசும் ரஜினி, தற்போது அதிரடியாக என்னை பணிய வைக்க முடியாது என்கிற தொனியில் பேசியுள்ளார். தான பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ரஜினி பேசியது அனைவரையும் சற்று நிலைகுலைய செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இதுவே ரஜினி தமிழக அரசியலில் தனக்கான இடத்தை பட்டா போட்டு விட்டார் என்பதற்கு அடையாளம் என்றும் சிலர் கருதுகின்றனர். அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை ரஜினி சந்திக்க மாட்டார், அவர் தனது ரசிர்களுக்கு பட்டை நாமத்தை சாத்த போகிறார் என பேசியவர்களுக்கு ரஜினியின் இந்த எதிர்ப்பு போக்கு சற்று வியப்பைத் தான் ஏற்படுத்தியிருக்கும்.

ரஜினிக்கு பேசத் தெரியாது, விஷயம் தெரியாதவர் ரஜினி, ரஜினி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்றே பேசுகிறார் என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தான் என்ன பேசுகிறோம் என்பதில் நிலைத்து நின்று தற்போது ஒரு பாதையில் பயணிக்க தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது.

நான் அதுவும் இல்லை, இதுவும் இல்லை, எதுவும் இல்லை என்ற குழப்பும் பேச்சுக்களைத் தவிர்த்து, தான் இப்படித்தான் என அடித்துப் பேசும் இந்த தருணம் ரஜினி தீவிர அரசியலில் கால்பதித்து விட்டதாகவும் தமிழக அரசியல் சூழலில் கருதப்படுகிறது என்றால் அதில் சற்று உண்மை இருக்கத் தான் செய்கிறது.

2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் ரஜினியின் என்ட்ரி இதோ தொடங்கி விட்டது, இனி எதிர்ப்பவர்களுக்கு தலைவரின் பதில் வேறு விதத்தில் இருக்கும் என ரசிர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஒரு நடிகராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினியின் அரசியல் வருகை நாடு முழுவதும் உற்றுப் பார்க்கப்படுகிறது. அது தமிழக அரசியல் களத்தில் வெற்றிக் கனியை பறிக்குமா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்...

RAJINIKANTH, POLITICS, PERIYAR, POLITICAL TENTANCY, POLITICAL ENTRY CONFIRM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்