தலைவா வா...! வா...! 'உங்க வார்த்தைகள படிக்குறப்போ...' 'எங்கள மீறி கண்ணீர் வருது...' - ரஜினி ரசிகர்கள் திடீர் தர்ணா...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினியிடம் நீண்டகாலமாக கேட்கப்பட்ட ‘எப்போ அரசியலுக்கு வர போறீங்க?’ என்ற கேள்விக்கு அதற்கான பதிலை ரஜினி இன்று தெரிவித்துள்ளார்.

இன்று ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சிகரமான அறிக்கையில், ’கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துக்கு பலவிதமான எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

டிவிட்டரில் ரஜினி ரசிகர் ஒருவர் ’ஒவ்வொரு வார்த்தைகளை படிக்கும்போதும் கண்ணீர் துளிகள் என்னையும் மீறி வெளிவருது தலைவா. முழுக்கு முழுக்க மனசு நொறுஞ்சிபோயிருச்சு. அளவு கடந்த அன்பு இருக்கறதுனால, எனக்கு எப்பவும் உங்க உடல்நலம் தான் முக்கியம். உங்க உடல்நலத்தை பார்த்துக்கோங்க தலைவா..நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

இன்னொருவர், ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணம், மூன்று வருட உழைப்பு அனைத்தும் கொரோனாவால் வீணாகிறது. உங்கள் நல்ல எண்ணமும், அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு நீங்கள் தான் குரு, தெய்வம் எல்லாம்.. உயிருள்ள வரை தலைவர் தான்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் கண்ணீருடன்  "தலைவா... வா...வா என்று கோஷமிட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்