'கலைந்தது ரசிகர்களின் கனவு!'.. நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்!.. ரஜினி மக்கள் மன்றத்தின் எதிர்காலம் 'இது' தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அதே சமயம், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. காரணம், அண்ணாத்த படப்பிடிப்பு முடிவதில் தாமதமாகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று வந்தேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? தொடர்ந்தால் என்ன பணிகள்? நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போறேனா? இல்லையா? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இனி, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்