‘நடுரோட்டில் வலிப்பு வந்து துடித்த இளைஞர்’.. காரை நிறுத்தி உயிரை காப்பற்றிய டாக்டர்.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடுரோட்டில் வலிப்பு வந்து உயிருக்குப் போராடிய இளைஞருக்கு தக்கசமயத்தில் முதலுதவி செய்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு தவலைப்பள்ளம் சாலை வழியாக மருத்துவர் பெரியசாமி காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது சாலையில் இளைஞர் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து உடனே தனது காரை நிறுத்திவிட்டு, அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க சமயத்தில் இளைஞர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் பெரியசாமி, ‘கூட்ட நெரிசல் இல்லாமல் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்பதற்காகவே இந்த சாலையைப் பயன்படுத்துவேன். வழக்கமாக நோயாளிகளை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பேன். இன்று சாலையில் வைத்து சிகிச்சை கொடுத்தேன். அவ்வளதுதான் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. சாலையில் எந்தவித உதவியும் இன்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை காப்பாற்றியது ரொம்பவே மகிழ்ச்சிதான். ஆனாலும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் அவரை கண்டுகொள்ளாமல் போனதுதான் வேதனையாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘மருத்துவர் மட்டும்தான் முதலுதவி கொடுக்க முடியும் என்றில்லை. பொதுமக்களும் இதுபோன்றவர்களுக்கு முதலுதவி அளிக்கலாம். முதலில் அவருக்கு சுயநினைவு இல்லை. மூச்சுவிட கடுமையாக சிரமப்பட்டார். அதனால் மூச்சு வரவழைக்கு பணியை செய்ய வேண்டும். அதற்கு அவரை ஒருகளித்து படுக்க வைத்து, மேல் காலை மடக்கி கீழே சாயாத அளவுக்கு வைத்து, கழுத்தை மேல் நோக்கி தூக்கி தலையை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போது வாய் நுரை மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டே இருக்கும். காற்று சீராக உள்ளே போகும். மூச்சு தடைபடக் கூடாது என்பதே நமது நோக்கம். அதைதான் நான் செய்தேன். அவர் செயற்கை பல் கட்டியிருந்தார். அந்த பல் தொண்டைக்குள் சிக்கியிருந்தது. அதை லாகவமாக எடுத்துவிட்டோம். மூச்சுக்குழாயில் சிக்கியிருந்தால் பெரிய ஆபத்தாகியிருக்கும். மருத்துவமனையில் அவர் நலமுடன் இருப்பதாக அவரது உறவினர்கள் சொன்னாங்க. ரொம்ப மகிச்சியாக இருக்கு’ என மருத்துவர் தெரிவித்தார்.

News Credits: Vikatan

PUDUKKOTTAI, DOCTOR, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்