'கறுப்பர் கூட்டம்' மீது அடுத்தடுத்து பாயும் புதிய வழக்குகள் - தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இ-பாஸ் இன்றி புதுச்சேரி வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டது தொடர்பான வழக்கில், சுரேந்தர் என்பவர் கடந்த 16ம் தேதி அரியாங்குப்பம் போலீசில் சரண் அடைந்தார்.

சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். சுரேந்தர், இ-பாஸ் இன்றி புதுச்சேரிக்கு வந்தது, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பதுங்கியிருந்தது, கொரோனா சமயத்தில் அரசு உத்தரவை மீறி கும்பலாக கூடியது உள்ளிட்டவை குறித்து வி.ஏ.ஓ., செல்வி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கறுப்பர் கூட்டம் சுரேந்தர், சிந்தனையாளர் இயக்கத்தைச் சேர்ந்த தீனா, பெருமாள், பாரத் ஆகியோர் மீது கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும், கந்தசஷ்டி கவசத்தை அவதுாறாக பேசிய, 'கறுப்பர் கூட்டம்' அலுவலகத்திற்கு, போலீசார், 'சீல்' வைத்தனர். தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக, சுரேந்திர நடராஜன் என்பவர், 'கறுப்பர் கூட்டம்' என்ற 'யு டியூப்' சேனலில், வீடியோ பதிவிட்டார். இதை கண்டித்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய சேனல் மீது, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக, செந்தில் வாசன் என்பவரை, சென்னை, வேளச்சேரியில் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, கந்தசஷ்டி கவசம் குறித்து அவதுாறாக பேசிய, சுரேந்திர நடராஜன் என்பவர், புதுச்சேரி காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் சரண் அடைந்தார். வரும், 30ம் தேதி வரை, அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் காவல் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, தி.நகர், கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலையில் உள்ள, கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின், அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர். அந்த அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில், வாடகைக்கு விட்ட நபரிடமும், குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையைத் தொடர்ந்து சேலத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் மீது தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்