'வர்றவங்க யாரும் கஷ்டப்படக்கூடாது' ... Social Distancing, பந்தல்களுடன் அமர நாற்காலிகள் ... அசத்திய புதுக்கோட்டை ரேஷன் கடைகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச ரேஷன் பொருட்களை மக்கள் பெற்றுக் செல்ல வேண்டி பந்தல் மற்றும் நாற்காலி ஆகியவற்றை போட்டு அங்கன்வாடி பணியாளர்கள் அசத்தியுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் மக்களின் தினசரி வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் இன்று முதல் இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அங்காடி மையத்திலும் மக்கள் இடைவெளி விட்டு வரிசையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட திருகோகர்கணம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள கூட்டுறவு அங்காடியில் பொருட்கள் வாங்க வரும் மக்களை நாற்காலி போட்டு அமர வைத்து இலவச பொருட்களை வழங்கியுள்ளனர். சிறப்பம்சமாக, வெயிலில் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பந்தல், தோரணம் கட்டியும் அங்காடிப் பணியாளர்கள் அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து அங்காடிப் பணியாளர்கள் கூறுகையில், 'இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ரேஷன் பொருட்களை மிகவும் கவனமாக கொடுத்து வருகிறோம். அதே நேரம் மக்கள் வெயிலில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நாற்காலி போட்டு, பந்தல் கட்டி அமர வைத்துள்ளோம். திருகோகர்கணம் பகுதியிலுள்ள கடைகள் சாலையோரம் இருப்பதால் அங்கு பந்தல் போட முடியவில்லை. இருந்தபோதும் அங்கு வரும் மக்களை வேகமாக அனுப்பி வருகிறோம்' என்றனர். புதுக்கோட்டை பகுதியிலுள்ள அங்காடி மையத்தில் மேற்கொண்ட இந்த முயற்சி நிச்சயம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள  கூட்டுறவு அங்காடிகளிலும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.

PUDHUKOTTAI, RATION SHOP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்