'மனைவி போட்டு கொடுத்த பக்கா ஸ்கெட்ச்'... 'வங்கி கணக்கில் 4 கோடி'... 'இன்னும் என்னவெல்லாம் வர போகுதோ'... வெளிவந்த மதன், கிருத்திகாவின் உண்மை முகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'பப்ஜி' மதன் மற்றும் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பலராலும் உச்சரிக்கப்படும் பெயர் பப்ஜி மதன். யூடியூப்பில் ஆபாசமாகப் பேசியது மற்றும் மதனுக்கு மாதம் தோறும் வந்த வருமானம் ஆகியவை பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மதன் இன்று காலை தர்மபுரியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாவை வாங்கியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பத்தூரில் 'ஆடம்பரமான ஹீரோ' என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி, பின்னர் உரிமையாளருக்கு வாடகை தராமல் மோசடி செய்து பப்ஜி மதன் தப்பியோடிய நிலையில், மதன் தனது அடையாளத்தைக் காட்டாமல் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து யூடியூப்பை தொடங்கி பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி லட்சங்களைக் குவித்து 'பப்ஜி மதனாக' மாறியுள்ளார்.

இதற்குப் பின்னணியில் மதனின் மனைவி கிருத்திகா இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி பப்ஜி மதன் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டை விபிஎன் சர்வரை பயன்படுத்தி ஒளிபரப்பு செய்து வந்துள்ளார் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளிடம் மதன் பணப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் 30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூடியூப் சேனலை பின்தொடர்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

யூ டியூப்பில் ஆபாசமாகப் பேசி மதனும் அவரது மனைவியும் சம்பாதித்த ரூ.4 கோடி வங்கிக் கணக்கில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்