வந்தாச்சு தீபாவளி.. இந்த பட்டாசுகளை மட்டும் வெடிங்க. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

Advertising
>
Advertising

நாளை (அக்டோபர் 24 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை என தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுவாக, தீபாவளியன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் பலவித உணவுகளை சமைத்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்வது வழக்கம். முக்கியமாக பட்டாசுகள். வண்ண வண்ண பட்டாசுகளை வாங்கி வெடிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தீபாவளியை பொதுமக்கள் பாதுகாப்புடனும் ஒலி மாசற்ற வகையிலும் கொண்டாடுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன எனவும் இதனால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அந்த அறிக்கையில்,"கடந்த ஆண்டைப் போலவே  காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியிருக்கிறது.

DIWALI, PCB, CRACKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்