நான் ‘ஹெல்ப் ஹெல்ப்’ன்னு கத்திட்டே இருந்தேன். ஆனால்... ‘செல்போன்ல சிக்னல் ஒரு பாயின்ட் கூட இல்ல...’ அப்போதான் திடீர்னு அந்த ‘ஆப்’ நியாபகத்துக்கு வந்துச்சு...! பதைபதைக்கும் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹோட்டல் கழிவறையில் சிக்கிய ஒரு பெண்ணுக்கு  தமிழக காவல்துறை வெளியிட்ட காவலன் செயலி உதவியுள்ளது. 

தொழில்நுட்ப வல்லுனரான மல்லிகா சென்னை நுங்கம்பாக்கத்த்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கியிருந்துள்ளார். ஓட்டல் கழிவறையை உபயோகிக்கும் போது கதவின் தாழ்ப்பாள் கோளாரால் கழிவறைக்குள்ளே சுமார் 20 நிமிடங்கள் மாட்டிக்கொண்டார்.

எவ்வளவு தான் கத்தியும் அது ஹோட்டல் பணிபுரிபவர்களின் காதில் கேட்கவில்லை, மேலும் அவருடைய செல்போனில் சிக்னல் இல்லாததால் யாரையும் தொடர்புகொள்ளவும் முடியாமல் பதற்றம் அடைந்த மல்லிகா என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். 

உடனே மல்லிகாவிற்கு தான் பதிவிறக்கம் செய்து வைத்த  காவலன் செயலி நினைவுக்கு வரவே, அந்த செயலியின் சிவப்பு பொத்தானை அழுத்தி காவல்துறைக்குத் தகவலளித்துள்ளார். அடுத்த 2 நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இது குறித்து மல்லிகா கூறுகையில், ”அப்போது காலை 11 மணி. நான் இருந்தது ஒரு சிறிய அறை. சிறிது நேரம் பதற்றப்படாமல் இருக்க முயன்றேன். ஆனால், கதவின் தாழ்பாளில் ஏதோ பிரச்சனை எனத் தெரிந்ததும் பெரும் பயம் என்னைத் தொற்றிக்கொண்டது” என்று கூறுகிறார் மல்லிகா.

மேலும் அவர், “நான் உதவி கேட்டு சப்தமிட்டுப் பார்த்தேன்; ஆனால், அந்தக் கழிவறை ஹோட்டலின் ஒரு தனித்த பகுதியில் இருப்பதால் என் குரலை ஹோட்டல் ஊழியர்கள் யாராலும் கேட்க முடியாது என்பது புரிந்தது. அப்போதுதான் எனக்கு காவலன் செயலியின் நினைவு வந்தது. SOS அம்சத்தைப் பயன்படுத்தினேன். உடனுக்குடன் காவல்துறை அதற்கான நடவடிக்கை எடுத்தது உள்ளபடியே ஆச்சரியமூட்டுகிறது” என்கிறார்.

மேலும் காவல் துறையினர் ஹோட்டலிற்கு வரவே தான் மல்லிகா கழிவறையில் மாட்டிய சம்பவம் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  சுமார் 10 நிமிடங்களாக திறக்க முயன்றும் முடியாததால் கதவை உடைத்து சென்று காவலர்கள் மல்லிகாவை மீட்டனர்.

தமிழ்நாட்டில் காவலன் செயலியைப் பயன்படுத்துவோர் பத்து லட்சத்துக்கும் மேல் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் சுமார் 1.60 லட்சம் பயனாளர்கள் இருப்பதாகவும் காவல்துறை தரும் தரவுகள் கூறுகின்றன. இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், செயலியில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும், அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும். அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அதற்கு எடுத்துக்காட்டாக  செல்போனில் சிக்னல் இல்லாமல் தவித்த மல்லிகாவும் காவலன் செயலி மூலம் மீண்டுள்ளார்.

SOSAPP

மற்ற செய்திகள்