'ஃபேஸ்புக் மூலம்... நிதி திரட்டி... ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடல்நிலைப் பாதிக்கப்பட்ட முதுநிலை காவலருக்கு சக காவலர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் இணைந்து பண உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். கடந்த வாரம் 4-ம் தேதி, காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த மனோகரனுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மனோகரன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை முதுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆகாச மூர்த்தி என்பவருக்கு தெரிவிக்கப்பட்டு, மனோகரனை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரனுக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினர். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது. பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றொரு ரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவித்தனர். அதனை சரி செய்ய ரூபாய் ஒன்றரை லட்சம் ஆகும் எனவும் கூறினர். இவ்வளவு தொகையினை அவரின் மனைவியினால் உடனடியாக தயார் செய்ய முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கும், கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால்சுதர், உதவி ஆய்வாளர் ஆகாச மூர்த்தி, கடலூர் புதுநகர் காவலர்களுக்கும் மற்றும் முகநூலில் உள்ள தமிழக காவலர்களிடம் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறும் வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு இடப்பட்டது. இதனைப் பார்த்த காவலர்கள் தங்களால் முடிந்த உதவியினைப் பணமாக நேரிலும், வங்கிக் கணக்கிலும் செலுத்தினர்.

மருத்துவச் செலவுக்கு தேவையான 1,50,000 ரூபாயை துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் கொடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்பொழுது மனோகரன் மருத்துவச் சிகிச்சை முடித்து நல்ல நிலைமையில் உள்ளார். இதனை மனோகரின் உறவினர்கள் சமுகவலைதளங்களில் பதிவிட்டனர். மனிதம் போற்றிய சக காவலர்களின் செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

POLICE, FACEBOOK, DONATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்