‘கொழுந்துவிட்டு எரிந்த நீர்’!.. கிணற்று தண்ணீரில் வரும் அந்த ‘வாசம்’.. பீதியில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடிநீர் கிணற்றில் எடுத்த தண்ணீர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்து சோதித்து பார்த்தார். அப்போது தண்ணீர் கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கோபியின் வீட்டுக்கு சென்று பெட்ரோல் கலந்த தண்ணீரை பார்க்க கூடினர்.

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபியின் வீட்டின் அருகே தமிழக பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு பெட்ரோல் சேமிப்பு கலன் பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கலனின் சேதம் ஏற்பட்டு பெட்ரோல் கசிந்து கோபியின் வீட்டு குடிநீர் கிணற்றில் ஊறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதுபோல் அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல குடிநீர் கிணற்றிலும் பெட்ரோல் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், உடல்நல பாதிப்பு உட்பட பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்