தியேட்டர்களில் 100% அனுமதி விவகாரம்.. ‘தடை’ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 31ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதற்கு தடை கோரி, சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து 2020 டிசம்பர் 31ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து வகையான கூட்டங்களிலும், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதமானது. மேலும், இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் துவங்காத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்