'23 வருடங்களுக்கு பிறகு...' 'நான்காவது முறையாக நடைபெறும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு...' 'தமிழிலும் ஓதுதல் நடைபெறுகிறது...' சரித்திர தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு இன்று 9:30 மணிக்கு தொடங்கி குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குடமுழுக்கு நடைபெறும் விமானத்தில் உச்சியில் சிவாச்சாரியர்கள் உள்ளனர். விமான உச்சியில் அமர்ந்திருக்கும் ஓதுவர்கள், பதிகங்களை தமிழில் ஓதுகின்றனர்.
தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெறும் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றிற்கு மகா குடமுழுக்கு நடைபெற்று முடிவுறும்.
கி.பி 1003 - 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜ சோழனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு, தி.மு.க ஆட்சியில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு,
சோழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை நிலம். தென்னிந்தியா முழுமைக்கும் தலைநகராக விளங்கிய பெருமையைக் கொண்டது தஞ்சாவூர். விஜயாலயன் காலத்திலிருந்து ராஜேந்திரன் தனது தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றும் வரையிலும் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே பழங்கால கற்களால் ஆனவை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே இருக்கும் கல், 8 இணைப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய கோயில் சுக்கான் பாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன் இந்த இடத்தில் மிகப் பிரமாண்டமான குழியைத் தோண்டி அதற்குள் டன் கணக்கில் ஆற்று மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுப்பதால் கோயிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே
தகவமைத்துக்கொள்ளும் தன்மை பெற்றுள்ளது என்பது ஆச்சர்யம்.
`பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயில் கல்வெட்டில் பொரித்து வைத்துள்ளார் ராஜராஜ சோழன்.
பெரியகோயிலின் விமானம் முழுவதும் ராஜராஜன் காலத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது.
பல்வேறு சரித்திரத் தகவல்களை கொண்ட தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்குத் திருவிழாவால் தஞ்சை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கு விழா, இன்று சரியாக 9:30 க்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், யாகசாலை பூஜைகள் பெப்ரவரி 1 - ம் தேதி அன்று தொடங்கியது. 110 யாக குண்டங்கள் கொண்டு தீபாராதனைகள் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைக்கான பந்தல் மட்டும் 11,900 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. யாக பூஜையில் 400-க்கும் அதிகமான பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றுள்ளனர்.
பண்டைய காவிரி ஆற்று நீர்போல் மக்கள் கட்டுக்கடங்காத கூட்டம் திரள்வதால், 4,492 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகம் மற்றும் தஞ்சை மாநகரப் பகுதிகள் என மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப் பகுதி முழுவதும் 17 இடங்களில் தற்காலிகக் காவல் உதவி மையங்களும், விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, கதவுகளுடன்கூடிய தடுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி என கோயிலுக்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றிலும் ஒருவழிப்பாதையில் அனுப்பப்படுவர். தீயணைப்புத்துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. மேலும், அதி நவீன தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
மாநகர் முழுவதும் 275 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 10 குடிநீர் லாரிகளைக்கொண்டு தண்ணீர் நிரப்பட்டு கொண்டே இருக்கும். 238 தற்காலிகக் கழிப்பறைகள், குப்பைகளைக் கொட்டுவதற்கு 800 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சேரும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளிச்செல்வதற்கு 25 லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன. சுகாதாரப் பணிகளுக்காக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதுடன், நடமாடும் மருத்துவ சேவை மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை. அவர்களை அழைத்து வருவதற்காக வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. வேனில் இருந்து இறங்கி கோயிலுக்கு நடந்துசெல்லும் பக்தர்களும், வயதானவர்களும் ஓய்வு எடுக்க, காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்