'அசர வைக்கும் சம்பளம்'...'பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி பயிற்சி மையம்'...குவியும் பட்டதாரிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வங்கி பணி, ஐஏஎஸ், நீட் என பல பயிற்சி மையங்களை பார்த்திருப்போம். ஆனால் பரோட்டா மாஸ்டர்களை உருவாக்க தனி பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் மதுரையை சேர்ந்த ஒருவர்.

அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பரோட்டாவிற்கு எப்போதுமே உண்டு. நாகர்கோவில் பானு பரோட்டா, நெல்லை பார்டர் பரோட்டா, தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா மற்றும் மதுரை பன் பரோட்டா என பரோட்டாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதுமே அதிகம் தான். பரோட்டா உடல் நலத்திற்கு கேடு என பலர் கூறிவந்த போதும் அதற்கான வரவேற்பு மட்டும் குறையவில்லை.

மதுரை எப்போதுமே அசைவ பிரியர்களின் சொர்க்க பூமி என்றே சொல்லலாம். அதுவும் விதவிதமாக பரோட்டா செய்வது மதுரை மாஸ்டர்களுக்கு கை வந்த கலை. அங்கு திரும்பிய இடம் எல்லாம் பல பரோட்டா கடைகளை பார்க்க முடியும். இதனால் பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள கடைகளில் பணிபுரியும் மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்குகின்றனர்.

சிலர் காலையில் ஒரு கடையிலும், மாலையில் ஒரு கடையிலும் என்று நாள் ஒன்றுக்கு 3000 ரூபாய் கூட சம்பாதித்து விடுகின்றனர். பலர் வெளிநாடுகளிலும் பரோட்டா போட்டு சம்பாதிக்கின்றனர். பரோட்டா மாஸ்டர்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட மதுரையை சேர்ந்த முகமது காசிம், அவர்களுக்கென ஒரு பயிற்சி மையத்தையே தொடங்கியுள்ளார்.

மதுரை ஆனையூரில் செல்ஃபி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு தற்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேர நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும் தனித்தனியாக 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 30 நாட்கள் தினமும் காலையும், மாலையும் பரோட்டா தயாரிக்க செய்முறை, செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

வேலை கிடைக்காத பட்டதாரிகள் பலரும், இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து நோட்டும், பேனாவுமாக பரோட்டா போடுவதற்கான குறிப்புகளை பெற்றுகின்றனர். இவர்களுக்கு மைதா மாவை தட்டி அதை வீசுவது எப்படி என்பது குறித்து தான் முக்கிய பயிற்சியாக அளிக்கப்படுகிறது. சாதாரண பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகையான பரோட்டாக்கள் தயாரிக்கவும், சால்னா தயாரிக்கவும் இவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

பல பட்டதாரி இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்திருப்பது, பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை, மற்றும் அதற்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை, எதிர்காலத்தில் அதன் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

MADURAI, JOBS, PAROTTA TRAINING CENTRE, JOBLESS, SELFIE PAROTTA COACHING CENTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்