'எங்க பொண்ணு அந்த 7 பேர் உடம்புல வாழ்ந்துட்டு தான் இருப்பா,அது போதும் எங்களுக்கு...' உடல் உறுப்புகள் தானம் மூலம் 7 பேரின் உயிரை காப்பாற்றிய பேராசிரியை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம், கள்ளக்குறிச்சிப் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. சிறுவயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். மேலும் அவர் விரும்பிய படியே அவருக்கு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியையாக பணிபுரிய இடம் கிடைத்து தன்னுடைய கனவை நனைவாக்கி உள்ளார்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பிப்ரவரி 27-ம் தேதி கல்லூரிக்கு போகும் வழியில் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொது மக்கள் உடனடியாக கனிமொழியை அருகில் இருக்கும் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் கனிமொழியின் தந்தை இளங்கோவிற்கு தகவல் அளித்தனர்.
மகளின் விபத்து பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த தந்தை உடனே உறவினர்களுடன் பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவர்கள் கனிமொழியின் குடும்பத்தாரிடம் சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பெரும் அதிர்ச்சி அடைந்த கனிமொழியின் பெற்றோர் தன் மகள் கோமாவிற்கு சென்றதை ஏற்றுகொள்ள முடியாமல் தத்தளித்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருக்கும் மருத்துவர்களிடம் தன் மகள் எல்லோருக்கும் உதவும் குணம் உடையவள் என்று கூறி, தன் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கனிமொழியின் குடும்பத்தாரின் சம்மதத்தோடு, 7 பேருக்கு அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி, ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.
மேலும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன
ஆசையாக வளர்த்த தன் மகள் தங்களோடு இல்லை என்றாலும், உதவி தேவைப்பட்ட ஏழு பேரின் உடலிலும் வாழ்ந்து வருவாள் என்று கூறி இளங்கோ கண்கலங்கிய காட்சி அங்கிருந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்தச் செய்தி சமுக வலைதளங்களில் பரவி அனைவரது பாராட்டையும், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துயுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்