தலைவலி மாத்திரைன்னு தான் நெனச்சோம்.. ‘ஆனா..!’ பெற்ற ‘மகனால்’ நேர்ந்த கொடுமை.. கண்ணீர் மல்க பெற்றோர் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைவலி மாத்திரை எனக் கூறி தூக்க மாத்திரையை கொடுத்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தாய், தந்தையை பெற்ற மகனே வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் பம்மையன் (70). இவரது மனைவி ராமுத்தாய் (65). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் வேலை பார்த்தே பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்த சமயத்தில் இவர்களது மகன் புவனேஷன் என்பவர் இருவரையும் பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டை தானசெட்டில்மெண்ட்டாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அதன்பிறகு எந்த உதவியும் பெற்றோருக்கு புவனேஷன் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவலிக்கு மாத்திரை கொடுப்பதாக இருவருக்கும் தூக்கமாத்திரையை புவனேஷன் கொடுத்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இருவரும் மயக்கத்தில் இருந்தபோது தாய் கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ‘இனி வீட்டில் உங்களுக்கு இடம் இல்லை. வீடு எனக்கு மட்டுமே சொந்தம்’ என சொல்லி பெற்றோரை வீட்டை விட்டு புவனேஷன் துரத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதிய தம்பதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தெரிவித்த வயதான தம்பதியினர், ‘எங்களை ஏமாற்றி எடுத்துக்கொண்ட நகை, பணம் ஆகியவற்றை மீட்டு, மகன் புவனேஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனுக்கு தானசெட்டில்மென்ட்டாக வழங்கிய வீட்டின் பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’ என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்