"எல்லோரும் என் சொந்தம் தான்".. 900 குடும்பங்களின் பெயரையும் பத்திரிக்கையில் அச்சடித்த ஊராட்சிமன்ற தலைவர்.. யாருப்பா இவரு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்கு 900 குடும்பங்களின் பெயர்களையும் திருமணப் பத்திரிக்கையில் அச்சடித்து வழங்கியது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
திருமணங்களில் பத்திரிக்கை அடிப்பது பல்வேறு சிக்கல்களை சிலருக்கு உருவாக்கிவிடுவதை நாம் பார்த்திருப்போம். பத்திரிக்கையில் தனது பெயர் இடம்பெறவில்லை என உறவினர்களுக்குள் ஏற்படும் சிக்கல்களையும் பார்த்திருப்போம். ஆனால் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கு அந்த சிக்கல் வர வாய்ப்பேயில்லை. காரணம், தனது ஊராட்சியில் அமைந்திருக்கும் அனைத்து குடும்பங்களின் பெயர்களையும் தனது மகளுடைய திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இவர்.
ஊராட்சி மன்ற தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது மல்லபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வருகிறார் ரமேஷ். 53 வயதான இவர் இரண்டாவது முறையாக இதே ஊராட்சி மன்ற தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஊராட்சியில் மல்லபுரம், கச்சுக்கட்டு, திருமலைராஜபுரம், வில்வேலங்குடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
திருமணம்
இந்நிலையில் ரமேஷ் தனது மகள் ஷாலினி என்பவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். சமீபத்தில் அவருக்கும் கைலாஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே திருமண பத்திரிக்கை அடிக்கும்போது அந்த ஊராட்சியில் உள்ள 900 குடும்பங்களின் பெயர்களையும் பத்திரிக்கையில் அச்சடிக்க முடிவெடுத்திருக்கிறார் ரமேஷ்.
அதுமட்டுமல்லாமல் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை கொடுத்து அனைவரையும் தனது இல்லத் திருமணத்திற்கு வரும்படி அன்பு கோரிக்கை வைத்திருக்கிறார் ரமேஷ். இதுபற்றி அவர் பேசுகையில்," எனது ஊராட்சிக்கு உட்பட்ட அனைவரின் குடும்பமும் எனக்கு ஒன்றுதான். இவர்கள் அனைவரையும் எனது குடும்பத்தில் ஒருவராகவே நான் கருதுகிறேன். எனது மகளை அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும். எப்போதும் போல மக்களுக்கான எனது சேவை தொடரும்" என்றார்.
மக்கள் மகிழ்ச்சி
இன்று (ஜூன் 24) ரமேஷ்-ன் மகளான ஷாலினிக்கும் கைலாஷ்-ற்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் ஊர்மக்கள் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவரான ரமேஷ் தனது வீட்டு திருமணத்திற்கு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களின் பெயர்களையும் பத்திரிக்கையில் அச்சடித்து வழங்கியது பலரையில் வியப்படைய செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த திருமண பத்திரிக்கை புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | பெட்ரோல் வாங்க 5 நாள் கியூ..அடுத்தடுத்து நிகழும் துயரம்.. இலங்கையின் தற்போதைய நிலை என்ன?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்