'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'?... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்த பட்டியலை முதல்வர் வெளியிட்டுப் பேசினார்.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி போன்ற பகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர், ''தொழிற்சாலைகள் நிறைந்த இந்த ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கிடவும் கழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.

அன்றைய தினம் ஓசூர் பகுதிக்கு டி.வி.எஸ். உள்பட 4 நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அதன்பிறகு 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதே ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் தொழி தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இவ்வாறு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்போது இந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஓசூர் பகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏராளம். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ புதிய தொழில் தொடங்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியைப் பரப்பி வருகிறார். 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கவில்லை. நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தந்தது அ.தி.மு.க.அரசு'' தான் என முதல்வர் தனது பரப்புரையில் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்