'தடுப்பூசி சோதனைக்கு நடுவே'... 'அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள சென்னை தன்னார்வலர்!!!'... 'ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சோதனையால் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி, சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தரப்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பல தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த மருந்தை செலுத்திக் கொண்ட சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயது தொழில் ஆலோசகர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 10 நாட்களிலேயே தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மூளை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிஎம்ஆர், சீரம் நிறுவனம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக நிபுணர் குழு, சோதனையை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து 3ஆம் கட்ட சோதனைக்கு தன்னார்வலர்களை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் இடம் பெறவில்லை என்பதும் பாதிக்கப்பட்டவரின் குற்றச் சாட்டாகும். எனவே ரூ 5 கோடி நஷ்ட ஈடு வழங்குவதோடு மற்றவர்களும் இதே போல பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பு மருந்து சோதனையை நிறுத்த வேண்டும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்