"சச்சினுக்கு வரி விலக்கு கொடுத்தீங்க!.. விஜய்க்கு மட்டும் அபராதமா"?.. நடிகர் விஜய்க்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்த ஓபிஎஸ் மகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரியது குறித்து ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில், "சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது" என்றும், "வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் இணையத்தில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் விஜய்க்கு எதிராக பல விமர்சனங்கள் எழ தொடங்கியதை அடுத்து, அவரது ரசிகர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பதிவில், "நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும், சிறுசிறு குறைகளை மிகைப்படுத்தி பேசுவது மனித இயல்பாக இருக்கிறது.

மேலும், இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதே போல் 2012ல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த மனிதராக இருந்தாலும் பல கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும், அவமானங்களையும் தாண்டிதான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேற்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஜெயபிரதீப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்