'உரிச்சா இல்ல, வாங்க நினைச்சாலே கண்ணீர் வரும்'... 'விண்ணைத்தொடும் வெங்காய விலை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தானின் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள் தான் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு கொட்டி தீர்த்த பருவமழையின் காரணமாக, வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் சந்தைதான் நாட்டின் மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையாகும். இங்கு கடந்த வாரம் 33 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை வார இறுதியில் 45 ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு வெங்காய விலை அடைந்த புதிய உச்சமாகும். இந்த சூழ்நிலையில் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசிடம் தற்போது 56 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பில் உள்ளநிலையில், வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதைத் தடுக்கவும், வெங்காயத்தை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் வெங்காயம் விலை உயர்ந்த நிலையில், மத்திய அரசு வெங்காயத்துக்கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்தது.
அதோடு, 2 ஆயிரம் டன் வரை வெங்காயம் இறக்குமதிக்கு வரி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வெங்காய விலை கட்டுக்குள் வரவில்லை. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ வெங்காயம் டெல்லியில் 65 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 56 ரூபாயாகவும், மும்பை மற்றும் பெங்களூருவில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 வரை விற்பனையாகிறது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில், வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காய விலையை குறைக்க அரசு மேலும் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மற்ற செய்திகள்