"லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க?".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிப்பால் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு முன்னால் பலரும் கோயம்பேடு சென்று அங்கு தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு தத்தம் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

இதனால் கோயம்பேடு டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களையும், 1359 இருசக்கர வாகனங்களையும் மக்கள் விட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டிருப்பினும், சென்னைக்கு வெளியே சென்றவர்கள் சென்னைக்குள் வருவதில் கெடுபிடிகள் உள்ளன.  எனினும் பல பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் திருப்பி எடுக்கவும் வரத் தொடங்குகின்றனர். ஆனால் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு 55 நாட்கள் ஆனதால் 55 நாட்களுக்கும் வாடகை கொடுக்க தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.

ஆம், இந்த 55 நாட்களுக்கு முழுநேர வாடகை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, வெளியான முதல்வரின் அறிக்கைப்படி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும் அவற்றுக்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பார்க்கிங் ஒப்பந்ததாரர்களுக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஊரடங்குக்கு முன்னரே பலரும் இவ்வாறு வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதாலும், அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும்,  தற்போது அவர்கள் திரும்பிவந்து வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஒரு நாளைக்குரிய பார்க்கிங் கட்டணமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்