'ஏன் ராசா தாத்தாவோட சொத்து மட்டும் வேணும், ஆனா தாத்தா வேண்டாமா'?... '101 வயது முதியவர் கொடுத்த ஷாக்'... வாயடைத்து நிற்கும் பேரன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னை கவனித்துக் கொள்ளாத பேரனுக்கு அவரது தாத்தா தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். 101 வயதாகவும் இவர் வயதான காலத்தில் அவரை பராமரித்துக் கொள்வதற்காக அவருக்குச் சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை 2008-ல் அவரின் மகன் வழி பேரன் மாசிலாமணிக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். ஆனால் சின்னப்பனை மாசிலாமணி கவனிக்கவில்லை.
இதனால் வயதான காலத்தில் சின்னப்பன் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து பேரனிடமும், அவரது உறவினரிடமும் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி திண்டிவனம் சப்-கலெக்டர் அனுவிடம், தான் சந்திக்கும் கஷ்டங்களை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளார். அதில், ''வயதான காலத்தில் தனியாகக் கஷ்டப்பட்டு வருகிறேன்.
அதனால் என் பேரனுக்கு நான் எழுதிக் கொடுத்ததான செட்டில்மென்ட் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்''. இதையடுத்து சப்-கலெக்டர் அனு, சின்னப்பனின் மகன்கள், மகள்கள் என 6 பேர் மற்றும் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் சின்னப்பன் தனியாகக் கூரை வீட்டில் தானே சமைத்துச் சாப்பிட்டு வருவதும், அவரை குடும்பத்தினர் யாரும் பராமரிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007, பிரிவு 23-ன் படி சின்னப்பன், மாசிலா மணிக்குத் தானமாக எழுதிக் கொடுத்த பத்திரப்பதிவு எண்: 761/2008-ஐ ரத்து செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகல் சத்தியமங்கலம் சார் பதிவாளருக்கு அனுப்பப்பட்டது.
தன்னை கவனிக்காத பேரனுக்கும், அவரது குடும்பத்திற்கும் 101 வயது முதியவர் தகுந்த பாடத்தைப் புகட்டியுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்