'கிணற்றுக்குள் விழுந்த குழந்தை'...சூப்பர் ஹீரோவான 'சென்னை பாட்டி'...மெய்சிலிர்க்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிணற்றுக்குள் விழுந்த பேத்தியை காப்பாற்ற,அடுத்த நிமிடமே கிணற்றுக்குள் குதித்து பேத்தியை காப்பாற்றிய பாட்டியின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் கிருபாவதி.ஆசிரியையான இவருக்கு அரிபிரியா என்ற மகள் இருக்கிறார்.திருமணமான அவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் வீட்டின் முன்பகுதியில் இருந்த கிணற்றின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.கிணறானது தகரத்தால் மூடப்பட்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் மேலே ஏறிய குழந்தை,தவறி கிணற்றுக்குள் விழுந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி கிருபாவதி,அடுத்த கணமே குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார்.

கிணற்றுக்குள் 5 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் குழந்தையை தூக்கி வைத்துவிட்டு `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' எனச் சத்தம்போட்டார்.உடனே அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள்,கிணற்றுக்குள் இருட்டாக இருந்ததால் தங்களின் செல்போன் மற்றும் மின்விளக்குகள் மூலமாக வெளிச்சத்தை ஏற்படுத்தினார்கள்.உடனே பெரிய கயிறு மற்றும் வாளியை கொண்டு வந்து அதன் மூலம் குழந்தையை மீட்டர்கள்.கிணற்றுக்குள் மோட்டார் மற்றும் குழாய்கள் இருந்தபோதும் அதில் மோதாமல் குழந்தை தண்ணீரில் விழுந்ததால் எந்தவிதக் காயமும் இன்றி தப்பியது.

இதையடுத்து கிருபாவதியை மீட்பதற்காக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பெரிய டார்ச் லைட்டை கொண்டு கிணற்றுக்குள் வெளிச்சத்தை ஏற்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து கிணற்றுக்குள் ராட்சத கயிறு மூலம் இறங்கிய சுபாஷ் என்ற வீரர்,அந்தக் கயிற்றில் கிருபாவதியை அமரவைத்து பத்திரமாக வெளியே கொண்டு வந்தார்கள்.அதன் பிறகு தான் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தயாராக இருந்த ஆம்புலன்ஸில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.கிருபாவதி மட்டும் புத்திச்சாலித்தனமாகச் செயல்படவில்லை என்றால் நிச்சயம் குழந்தை இறந்திருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தார்கள்.தனது உயிரை பற்றி கவலைப்படாமல் பேத்தியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த கிருபாவதியை காவல்துறையினர்,தீயணைப்பு வீரர்கள் என பலரும் பாராட்டினார்கள்.

GRAND DAUGHTER, CHENNAI, GRAND MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்