மகளிர் தினத்தன்று.. யோகாவில் புதிய சாதனை படைத்த மீனாட்சி கல்லூரி மாணவி.. குவியும் பாராட்டு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில், மீனாட்சி கல்லூரி மாணவி பிரியதர்ஷினி பெயர் இடம்பிடித்துள்ளது.

Advertising
>
Advertising

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகவியல் துறை மாணவியான செல்வி சே. பிரியதர்ஷினி, யோகாவில் ஆசிய அளவில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கடற்கன்னி வடிவில், அமர்ந்து செய்யப்படும் ஏக பாத ராஜகபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம், அவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

புதிய சாதனை

ஏக பாத ராஜகபோதாசனம் என்ற ஆசன நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டில் நந்தினி சார்தா என்பவர், 51 நிமிடங்கள் 58 வினாடிகள் கால அளவில் அமர்ந்து நிகழ்த்தியதே முந்தைய சாதனையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவி பிரியதர்ஷினி 60 நிமிடங்கள் முழுமையாக அந்த ஆசன நிலையில் நீடித்ததன் மூலம், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மகளிர் தின நிகழ்ச்சி

(08.03.2021) மகளிர் தினத்தையொட்டி, மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லூரி அரங்கத்தில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வேந்தரான திரு.ஏ.என். ராதாகிருஷ்ணன், கல்லூரி தலைவரான திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் ஆர்.எஸ். நீலகண்டன், பதிவாளர் முனைவர் சி. கிருத்திகா, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. சாந்தி ஆகியோருடன் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ் அமைப்பின் தீர்ப்பு நடுவர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

படிப்பிலும் சிறந்த மாணவி

யோகரத்னா சரஸ்வதி அவர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிரத்தையுடன் யோகா பயின்று வந்தவர் பிரியதர்ஷினி. தன்னுடைய ஆசிரியரை போலவே, அவரும் யோகரத்னா பட்டம் பெற்றவர். தற்போது, மீனாட்சி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும் அவர், படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்ந்து வருகிறார்.

கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி

கல்லூரி முதல்வர் சாந்தி, துறைத் தலைவர் ச. மலர்விழி ஆகியோர் அளித்த ஊக்கமும், மெகர் (MAHER) பல்கலைக்கழகம் வழங்கிய நன்கொடை மற்றும் அனைத்து வகை உதவிகளும் உற்சாகமும் இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக அமைந்தது என கூறும் பிரியதர்ஷினி , இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

யோகா ஆசிரியர் சரஸ்வதி, தன்னுடைய தந்தை சேகர் மற்றும் தாய் அனிதா ஆகியோரும், இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தூண்டுகோலாக இருந்தனர் என்றும் மாணவி பிரியதர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.

MAHER, YOGA, PRIYADARSHINI, MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION AND RESEARCH, RAJAKAPODASANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்