சிகிச்சைக்காக ‘சமூக வலைதளம்’ மூலம் சேர்த்த பணம்.. ‘விபத்தில் சிக்கியவருக்கு’ நெருங்கிய நண்பரால் நடந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைஞர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் சேகரித்த பணத்தை அவருடைய நண்பரே போலி பில்லைக் கொடுத்து மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முருகன் தன் நெருங்கிய நண்பரான பெனட் என்பவரிடம் தனது நிலை குறித்து கூறி தனது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் குமரி மாவட்டம் தேரேக்கால்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஆனால் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை என்றும், அங்கு தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பணவசதி இல்லாத முருகன் தன் நிலை குறித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். அதைப் பார்த்த பலரும் அவருடைய வங்கிக் கணக்கில் சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளனர். அதன்மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் அவருக்கு கிடைத்துள்ளது. பின்னர் அதை வைத்து சிகிச்சை செய்துவிடலாம் எனக் கூறி பெனட் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சிகிச்சை சமயத்தில் மருத்துவமனை பில்லைக் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக பெனட் முருகனிடமிருந்து 2 லட்சம் ரூபாயையும் வாங்கியுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முருகன் கடந்த சில நாட்களுக்கு முன் மருந்துகள் வாங்குவதற்காக அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருந்த மருத்துவரிடம் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிக செலவாகிறது, எனக்கு அறுவை சிகிச்சைக்கே 2 லட்சம் ரூபாய் ஆகிவிட்டது எனப் புலம்பியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் முருகனிடம், “உங்களுக்கு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருந்து செலவுகளுக்காக ரூ.5700 மட்டுமே உங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகன் பெனட் தன்னிடம் கொடுத்த மருத்துவமனை பில்களை மருத்துவரிடம் காட்ட, அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை சார்பில் பெனட் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிபடையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

MONEY, FACEBOOK, ACCIDENT, VIDEO, FRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்