'5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்...' 'எங்க வீட்டு குழந்தை மாதிரி தானே...' - போலீசாரின் மனிதாபிமானம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய நந்தம்பாக்கம் போலீசாரின் மனிதாபிமானமிக்க  செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னையில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் கனிஷ்கா (வயது 5).

இவரது வீட்டின் அருகே சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு செந்தில்குமார் வசித்து வருகிறார். கனிஷ்கா, அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று விளையாட செல்வதுண்டு. இதனால் அவரது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே  மாறினார். சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கனிஷ்காவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பரிசோதனையில் அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் கார்த்தியின் பொருளாதார நிலையும் வழக்கத்தைக் காட்டிலும் மோசமானது. இதனால் மகளின் சிகிச்சைக்கான பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் தவித்தார். இதை கேள்விப்பட்ட போலீஸ் ஏட்டு செந்தில்குமார், தன்னால் முடிந்த ரூ.30 ஆயிரத்தை கார்த்திக்கிடம் கொடுத்து அறுவை சிகிச்சைக்கு செல்லும்படி கூறினார்.

அத்துடன் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சிறுமியின் நிலைமை பற்றி தெரிவித்தார். உடனே நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த அனைத்து போலீசாரும் தங்களால் இயன்ற ரூ.45 ஆயிரத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்தையும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனக்கு தெரிந்த தன்னார்வ தொண்டு அமைப்பாளர்களிடம் இருந்து நிதியாக திரட்டி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.

நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் செய்த உதவியால் சிறுமிக்கு மருத்துவமனையில் நல்லபடியாக இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சை முடிந்து தற்போது சிறுமி கனிஷ்கா நலமுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். நந்தம்பாக்கம் போலீசாரின் இந்த மனிதாபிமானமிக்க செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்...!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்