'இதுக்கு தானே அவ்வளவு ஆச பட்டா'... 'பிஞ்சு முகத்தைப் பார்க்க ஆசையாக இருந்த இளம்பெண்'... நொறுங்கிப் போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கருவுற்றிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் முகத்தை, முதல்முறையாகப் பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் என்பது வார்த்தையால் அளவிட முடியாத ஒன்று. ஆனால் பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி பவித்ரா. இவர் கர்ப்பமடைந்த நிலையில், பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் ஒட்டு மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்த நிலையில், அந்த சந்தோசம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.

குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் பவித்திராவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த உறவினர்கள் பவித்திராவை உடனடியாக வேறொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கும் போதிய வசதிகள் இல்லாததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதனையடுத்து அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதனால் பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்த சந்தோசத்தைக் கொண்டாடுவதற்குள் தாய் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பவித்ராவுக்கு பிரசவம் நடைபெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை குறைபாடு காரணமாகத் தான் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதோடு சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பின்னர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

குழந்தை பிறந்த நிலையில் அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்