'முதலிரவில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்'... 'நைட்டோடு நைட்டாக காம்பவுண்ட் ஏறி குதித்த காதலன்'... மொத்த குடும்பத்தையும் அள்ளிட்டு போன போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்த மாணவி கல்லூரிக்குச் சென்று வரும் வழியில் கடை வைத்திருக்கும் சுதீஷ் என்ற வாலிபரோடு, பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. அந்த மாணவிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது கூட தெரியாமல் அந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வீட்டிலிருந்து கொண்டு செல்போனில் பேசி காதலை இருவரும் வளர்த்து வந்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் மாணவியின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவர, எதிர்காலம் மற்றும் படிப்பு குறித்து எடுத்துக் கூறாமல் அவசர அவசரமாக, தங்கள் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பேசி திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டு வீட்டிலேயே திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்கள். இதையடுத்து முதலிரவிற்காக ஆயிரம் கனவுகளோடு மணமகனும், மனைவியின் அறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு அந்த மாணவி தனது காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், பெற்றோர் தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள் எனக் கூறி அழுதுள்ளார். இதற்கு மேல் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த மணமகன், தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்து, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து தனது காதலன் சுதீஷை தொடர்பு கொண்ட, அந்த மாணவி அவரை வீட்டிற்கு வரவைத்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து சுதீஷ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனைக் கவனித்த மாணவியின் தந்தை, இரவில் ஏன் இப்படி வீட்டிற்குள் வருகிறாய், உன்னைத் திருமணத்திற்குக் கூட நாங்கள் அழைக்கவில்லையே எனக் கேட்டுள்ளார். அப்போது உங்கள் மகள் தான் என்னை வரச் சொன்னார், என உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். இதையடுத்து கடுப்பான சிறுமியின் குடும்பம் அந்த இளைஞரை நன்றாகக் கவனித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தனது காதலன் போலீசிடம் சிக்கியதை அறிந்த அந்த மாணவி, சுதீஷை காப்பாற்றுவதாக நினைத்து, தனக்கு 17 வயது தான் ஆவதாகவும், பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக காவல்துறையிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இதைக் கேட்டு ஓஹோ அப்படியா சம்பவம், என காவல் துறையினர், சுதீசுடன் சேர்ந்து, சிறுமியின் பெற்றோரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

மாணவிக்கு 17 வயது மட்டுமே ஆவதால் அவருக்குக் கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் தந்தை, தாலிகட்டித் தலைமறைவான மணமகன்,  மாமனார், மாமியார் மற்றும் காதலன் சுதீஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இதனிடையே போலீசார் வழக்குப் பதிவு செய்யப்போவதை அறிந்த மாணவியின் பெற்றோர், மற்றும் மாமனார் மாமியார் காவல் நிலையத்திலிருந்து தப்பி விட்டனர். எப்படியும் காதலியை தன்னுடன் அனுப்பி வைப்பார்கள் எனக் காத்திருந்த காதலன் சுதீஷ் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டார்.

தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் தடம் மாறும் போது அவர்களுடன் அமர்ந்து பேசி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, இளம் வயதில் திருமண ஏற்பாடுகள் செய்து, கடைசியில் அனைத்தும் தவறாகத் தான் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்