'எந்த அப்பாக்கும் இந்த நிலைமை வரக்கூடாது'... 'உடைந்த மொத்த கனவு'... 'இளைஞருக்கு நடந்தது என்ன'?... வெளியான உருக்கமான தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகர்கோவில் இளைஞர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி முகிலன்விளையை சேர்ந்தவர் சிவனேஷ். 22 வயது இளைஞரான இவர், மதுரையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படிப்பை தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து சிவனேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம் மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதில், ''சிவனேஷ் விழுந்த கிணறு சுமார் 100 அடி ஆழமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனால் கிணற்றுக்குள் இறங்க படிக்கட்டு வசதி இல்லை. பழங்காலத்து குத்துபடி மட்டும் இருந்துள்ளது. அதோடு முக்கியமாக கிணற்றில் தண்ணீர் இல்லை. சிறிது தண்ணீரோடு சேறும், சகதியும் மட்டும் இருந்துள்ளது. சிவனேஷ் வழக்கம்போல பல் துலக்குவதற்காக காலையில் கிணற்று பக்கம் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றுக்குள் இருந்த மோட்டார் மீது விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. கிணற்றுக்குள் விழுந்த சிவனேஸின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தந்தை, தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என போராடியுள்ளார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. கிணற்றில் விழுந்த சிவனேசை உடனடியாக மீட்க முடியாததால் அவரது உயிர் பறி போனது. பலியான சிவனேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே மகனை காப்பாற்ற முடியவில்லையே என கதறி அழுத சிவனேஸின் தந்தை, எந்த தந்தைக்கும் இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது என கதறினார். மருத்துவர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவரின் கனவு பாதியிலேயே கலைந்து விட்டதே என கூறியபடி குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். 22 வயது இளம் மருத்துவ மாணவரின் எதிர்பாராத மரணம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்