'லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோகள்'...'தமிழகத்தை உலுக்கிய காசி வழக்கு'... எதிர்பாராத திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் தற்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் காசி, இந்த பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பெண்களை ஆபாசப் படம் எடுத்து அவர்களை மிரட்டிய விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் காசியின் நண்பர் தினேஷ் என்பவரும் கைதானார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தினேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், 'இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் போலீசார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துவிட்டேன். சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் மீது கொடுத்த பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்ததால் தொடர்ந்து சிறையிலிருந்து வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “மனுதாரர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மனுதாரர் மற்றும் அவரது நண்பர் காசியிடம் இருந்து லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்தது பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விசாரணை மந்தமாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கின் தீவிரத்தை அறியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை அதிகாரி செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்குப்பதிவு செய்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் கீழ் நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? குறைந்தபட்சம் இடைக்கால அறிக்கையாவது தாக்கல் செய்திருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினார். அதோடு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கு விசாரணை விவரங்களைத் தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமின் கிடைத்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்