'போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்'... 'நாளை பேருந்துகள் ஓடுமா'?... வேலைக்கு வரலன்னா சம்பளம் கிடையாது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகக் கூறி உள்ளனர். இதுதொடர்பாக பேசிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், ''போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வு தந்திருக்க வேண்டும். 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் சம்பள உயர்வு தரப்படாதது ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான நிதியை பட்ஜெட்டிலும் அரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்குப் பணி ஓய்வுக் கால பலன்கள் ஓய்வு பெறும் நாளில் கிடைப்பதில்லை.

அதேநேரத்தில் ஊழியர்களின் பிரச்சனையை அரசுக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் அரசு அதைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை முதல் கட்டாயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். சுமார் 1 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்'' எனச் சண்முகம் கூறியுள்ளார்.

இதற்கிடையே பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து டெப்போக்களில் இருந்தும் பேருந்துகளை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்குச் சம்பளம் கிடையாது என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்