'முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட கார்'... 'என்ன ரேட் சார், நானே வாங்கலாம்னு இருக்கேன்'... விலை கேட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஹூண்டாய்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் ஆட்டோ மொபைல் வளர்ச்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த 1998ஆம் ஆண்டு முதன்முதலாக ஹூண்டாய் கார் நிறுவனத்தின் உற்பத்தியை அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி தான் தொடங்கி வைத்தார். அதேபோன்று 2008ஆம் ஆண்டு இரண்டாவது யூனிட்டையும் முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளர் என்ற பெருமையையும், வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதில் முதன்மை நிறுவனம் என்ற பெருமையையும் ஹூண்டாய் கார் நிறுவனம் பெற்றிருக்கிறது.  தமிழ்நாட்டில் இதுவரை 31.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்து 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது ஹூண்டாய்.

அதோடு இந்திய மக்களின் விருப்பமான கார்களின் பட்டியலில் ஹூண்டாய் கார்களுக்கு தனி இடமே உண்டு. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஹூண்டாய் நிறுவனத்திற்குச் சென்ற ஸ்டாலின், அங்கு நடைபெறும் உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். பின்னர் பேட்டரி காரில் ஹூண்டாய் தொழிற்சாலையை ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அல்கசார் காரின் பேனட்டில் வாழ்த்துகள் என்று தமிழில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அந்த கார் விற்பனைக்கு வருகிறதா? எந்த டீலரிடம் செல்கிறது என்று பலரும் விசாரித்து வந்தனர்.

குறிப்பாக சில அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தலைவர் கையெழுத்துப் போட்ட கார் என்ன விலை என்று கேளுங்கள், வாங்கி விடலாம் பரபரப்பாக விசாரித்து வந்தார்கள். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட கார் விற்பனைக்கு அல்ல என்றும் நிறுவனத்தில் அது ஒரு நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படும் என்றும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட காரை வாங்கி விடலாம் எனக் கனவில் மிதந்த பலருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த செய்தி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்