ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் என ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
Advertising
Advertising

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசாக நியமித்தும் உத்தரவிட்டனர்.

'போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் என பரிந்துரை செய்கிறோம். அந்த இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை ஏன் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றக்கூடாது?

ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொண்டு அறக்கட்டளை அமைக்கலாம்.

இந்த பரிந்துரைகள் குறித்து அரசு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்களை நிர்வகிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

போயஸ் கார்டன் வீடு மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்களை அரசின் பராமரிப்புக்கு மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்