மீரா மிதுனின் Boy friend-ஐயும் தூக்கிய போலீஸ்!.. தலைமறைவாக டூயட் பாடிய ஜோடி... தமிழ்நாடு காவல்துறையிடம் சிக்கியது எப்படி?.. யார் அந்த Boy friend?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் வழக்கில் தற்போது மற்றுமொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கான விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.

மேலும், அன்றைய தினமே, "தன்னை யாராலும் கைது செய்ய முடியாது. அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப்போல் நானும் இருப்பேன்" எனப் பேசி ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது குறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர விடுதிக்குச் சென்று மீராமிதுனை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றபோது, தன்னை போலீசார் கொடுமைபடுத்துவதாகக் கூறி மீரா மிதுன் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினார். அதன்பிறகு அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனினும், மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு தான், சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் வாகனத்திலேயே அழைத்து வந்தனர்.

போலீஸ் வாகனத்தில் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார்.

அப்போது மீரா மிதுன், தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும், கூச்சலிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என்ற வாக்குவாதத்தால் ஆணையர் அலுவலகம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது.

தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் எனத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு நடனக்கலைஞர் ஆவார். சர்வதேச அளவிலான நடனப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மீரா மிதுனும் நடனக்கலைஞர் என்பதால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமான இவர்கள், கடந்த ஒரு ஆண்டாக மிகவும் நெருக்கமாக பழகியதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்