'வீட்டுல சம்மதிக்கல'... 'ஆனா உன்ன விட்டுறமாட்டேன் டா'...'தமிழக இளைஞருக்காக கடல் கடந்து வந்த பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதல் வந்து விட்டால் போதும், மதம், சாதி ஏன் நாடு கூட தடையில்லை என்பதைப் பல காதலர்கள் பல நேரங்களின் உண்மையாக்கியுள்ளார்கள். அந்த வகையில் மானாமதுரை இளைஞருக்காக பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கடல் கடந்து வந்துள்ள நிகழ்வு பலரையும் நெகிழச் செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரத்தை சேர்ந்தவர் நிர்வின். பொறியியல் முடித்த இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பொறியாளர் மேரிஜேன் என்பவரும், அதே நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்துக்கு நிர்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தநிலையில், மேரிஜேன் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. இருப்பினும் நிர்வினின் மீது இருந்த காதலால் அவரை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்த மேரிஜேன், திருமணத்திற்காகத் தமிழகம் வந்தார்.

இதையடுத்து தமிழ் காலசாரப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருமண தலமான திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள ஒரு மண்டபத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமண விழா நடந்தது. மணமகள் மேரிஜேன் பட்டுச் சேலை உடுத்தி இருந்தார். மூக்குத்தியும், காதுகளில் தோடு, ஜிமிக்கியும், காலில் கொலுசும் அணிந்து இருந்தார்.

மேரிஜேன் கழுத்தில் நிர்வின் தாலி கட்டி அவரை கரம் பிடித்தார். இதே போல் தமிழ் கலாச்சாரப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து பேசிய மேரிஜேன், ''கடல் கடந்த காதல் கைகூடியதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு புது சொந்தங்கள் பலர் கிடைத்துள்ளனர். அவர்களின் அன்பைப் பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. 

எனது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் நிச்சயம் அவர்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என  மேரிஜேன் கூறினார். எல்லை, மொழி, நாடு தாண்டி திருமணம் செய்துகொண்ட தம்பதியரைப் பலரும் மனதார வாழ்த்திச் சென்றார்கள்.

IT ENGINEER, PHILIPPINES, MANAMADURAI, நிர்வின், மேரிஜேன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்