'மக்களே ‘Wifi ATM Card' வச்சிருக்கீங்களா, அப்போ உஷார்'.. 'நூதன முறையில் மோசடி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் கவனக்குறைவாக தவறவிடும் வைபை’ ஏ.டி.எம் கார்டுகள் தான் இந்த நபரின் குறியாக இருந்துள்ளது.

'மக்களே ‘Wifi ATM Card' வச்சிருக்கீங்களா, அப்போ உஷார்'.. 'நூதன முறையில் மோசடி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை கோயம்பேடு, பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். இவர், அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், சின்மயா நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு எனது வைபை ஏ.டி.எம். கார்டை மறந்துவிட்டுச் சென்றேன். அதன்பிறகு தவறவிட்ட கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே தக்க நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தரும்படி'' கூறி இருந்தார்.

Man steals Rs 25k from forgotten WiFi-enabled cards, arrested

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுத்த இடத்தை ஆய்வு செய்தபோது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எடுத்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அந்த பெட்ரோல் நிலையத்தில் விசாரித்தபோது, ஒரு வாலிபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ‘வைபை’ கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் என பலமுறை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனால் அந்த நபர் மீது சந்தேகமாக இருந்ததால் அந்த வாலிபர் புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அந்த புகைப்படத்தை வைத்தும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டன் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடை மற்றும் நகைபட்டறைகளில் வேலை பார்த்து வந்துள்ளார். ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்கள், ஞாபக மறதியால் தவறவிட்டுச் செல்லும் ‘வைபை’ ஏ.டி.எம்.கார்டுகளை மட்டும் குறிவைத்துத் திருடி, இதுபோல் பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரிந்தது.

இந்த கார்டுகளை ரகசிய குறியீட்டு எண் இல்லாமல் ரூ.5 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதால் பெட்ரோல் நிலையத்தில் அவசர தேவை எனக் கெஞ்சுவது போல் நடித்து பணத்தைப் பெற்றுச் சென்றது தெரிந்தது. மணிகண்டனிடம் இருந்து 6 ‘வைபை’ ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பொதுமக்கள் ஏடிஎம் கார்டுகளை தவறவிட்டால் உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்வது முக்கியம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்