'ஆயிரம் இருந்தாலும் அவன் உன் தம்பி'... 'இறந்த பிறகு இப்படி செய்வது பாவம்'... கல் நெஞ்சக்கார அண்ணனை பார்த்து அதிர்ந்துபோன ஊர்மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுவாக யாராவது இறந்து விட்டால் அவர் மீது என்ன கோபம் இருந்தாலும் அதை எல்லாம் மறந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். அது பரம்பரை பகையாக இருந்தாலும் கூட அதை எல்லாம் மறந்தவர்கள் இங்குப் பலர் உண்டு. அதற்குக் காரணம் அவரே போய்விட்டார் இனிமேல் எதற்கு அந்த பகையைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மணிக்கிராமம் தச்சர் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது அண்ணன் கலியபெருமாள். இவர்கள் இருவரும் அருகருகே சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார்கள். சபாபதி வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் கலியபெருமாள் வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் ஆரம்பத்தில் அரசல் புரசலாக ஆரம்பித்த பிரச்சனை தகராறில் முடிந்து இறுதியில் நீதிமன்றம் வரை சென்றது.

தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சபாபதி நேற்று திடீரென உயிரிழந்தார். இதையடுத்து சபாபதியின் உடலைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் வர ஆரம்பித்தனர். ஆனால் அவரின் உடலை உறவினர்களைப் பார்க்க விடாமலும், சபாபதியின் உடலை எடுத்துச் செல்ல வழி மறுத்தும் கலியபெருமாள் பிரதான வழியைப் பூட்டி வைத்தார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கலியபெருமாள் தரப்பு இறங்கி வரவில்லை. இறந்த வீடு என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் கலியபெருமாள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சபாபதி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இறந்த சபாபதி உடல் அந்த வழியாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் சபாபதி உன்னுடைய தம்பி, அவர் தற்போது உயிருடன் இல்லை. இந்த நேரத்தில் இப்படிச் செய்வது மனித நேயமற்றது. யார் மீது வேண்டுமானாலும் தவறு இருக்கலாம், ஆனால் ஒரு துக்க நிகழ்வில் இப்படி நடக்கக் கூடாது என கலியபெருமாளிடம் பலரும் பேசினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதில் சோகம் என்னவென்றால் கலியபெருமாளுக்கு தற்போது 80 வயது ஆகிறது. இந்த வயதிலும் சொந்த தம்பி இறந்தும் இவர் இப்படி நடந்து கொண்டது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்