‘திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து’... ‘நகைகளை திருடிச் செல்லும் நபர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து, நகைகளை  திருடிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சசிக்குமார். கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதியன்று, வடபழனியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், இவரும், இவரது குடும்பத்தாரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் திருமண மண்டபத்தில், இவரது மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நெக்லஸ் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவலர் சசிக்குமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சியின் வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில், திருமண மண்டபத்திற்கு வந்த மர்மநபர் ஒருவர், தனியாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் காவலரின் மகளை நைசாக தூக்கிச் சென்று, தங்க நெக்லசை திருடியது பதிவாகியிருந்தது. இதனையடுத்து, தனிப்படையினர் சிசிடிவி காட்சியின் உதவியுடன், திருடனை பிடிப்பதற்காக, தமிழக காவல்துறையினரின் அனைத்து வாட்ஸ் அப் குழுவிற்கும் தகவல் அனுப்பினர்.

இதில் விழுப்புரம் சண்முகாபுரம் காலனியைச் சேர்ந்த புருஷோத்தமன் தான், அந்த மர்மநபர் என்பதும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், திருமண மண்டபங்களில் தனியாக இருக்கும் குழந்தைகளின் நகைகளை திருடுவதை, வழக்கமாக அவர் கொண்டுள்ளதும் தெரியவந்தது. வடபழனியில் மட்டும் 4 திருமண மண்டபங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவர்மீது, 7 வழக்குகள் இருப்பது தெரியவந்ததுடன், அவரிடமிருந்து 17 சவரன் தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

CHENNAI, STEALS, THEFT, CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்