'அந்த போட்டோ'வ நெட்ல போடுவேன்'... 'அலற வைத்த சாப்ட்வேர் என்ஜினீயர்'... சென்னையில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்ஸ்டாகிராமில் பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் சாட்டிங் செய்து, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு லட்சக்கணக்கில் பணம் பறித்த சாப்ட்வேர் என்ஜினீயரின் செயல் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய தாயின்  ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்து அதில் தனது நண்பர்களோடு சாட்டிங் செய்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அந்த மாணவியை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த ராஜா என்ற நபர், தொடர்ந்து லைக்குகளை போடுவதும், கவர்ச்சியான வார்த்தைகள் மூலம் அந்த மாணவியை புகழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து ராஜாவோடு நெருக்கமான அந்த மாணவி தனது செல்போன் நம்பரை ராஜாவிடம் கொடுத்துள்ளார். செல்போன் எண் கிடைத்தவுடன் அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசி வந்த ராஜா, மாணவியின் மனதை கெடுக்கும் வகையில் மிகவும் நெருக்கமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் ராஜாவின் பேச்சில் மயங்கிய அந்த மாணவி, தன்னை வித விதமாக போட்டோ எடுத்ததோடு, ராஜா எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்க சொன்னானோ அப்படி எல்லாம் எடுத்து, அதனை தனிப்பட்ட முறையில் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தனது சுயரூபத்தை காட்டிய ராஜா, தன்னிடம் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அந்த மாணவியை படுக்கைக்கு அழைத்துள்ளார். இதனை கேட்டு மிரண்டு போன அந்த மாணவி உடனே ராஜாவின் தொடர்பை துண்டித்துள்ளார். உடனே மாணவி கொடுத்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மாணவியின் தாயிடம் பேசிய ராஜா, உங்கள் மகளின் அந்தரங்க புகைபடங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் அதிர்ந்து போன மாணவியின் தாய் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்பத்துக்கே தலைகுனிவு என்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தனது உறவினர் ஒருவரிடம் இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்க, அவரது ஆலோசனை படி வண்ணாரபேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசரை சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். அவரது யோசனை படி 2 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

ராஜாவும் பணம் கிடைக்கப்போகும் உற்சாகத்தில் வர, சம்பவ இடத்தில மறந்திருந்த காவல்துறையினர் ராஜாவை வசமாக மடக்கி பிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில்  ''திண்டுக்கல்லை சேர்ந்த சாய் என்கிற ராஜா சிவசுந்தரம் மென் பொறியாளராக வேலை செய்து வருகிறார். திருமணமான ராஜா, வீட்டில் இருந்தே புராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி, இன்ஸ்டாகிராமில் புகைபடங்களை பதிவிடும் மாணவிகளுக்கு, காதல் வலை விரித்து அதில் சிக்கும் பெண்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளான்.

கடந்த சில ஆண்டுகளாக இதனை செய்து வரும் ராஜா பணம் இல்லை என்று கதறும் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதையும் வாடிக்கையாக செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து ராஜாவின் லேப்டாப்பை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தபோது மேலும் 10 பெண்களின் அந்தரங்க புகைபடங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து அவனிடம் இருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ஆபாச படங்களை சேமித்து வைத்திருந்த மெமரிகார்டுகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பதின் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ மாணவியர்கள் இதுபோன்ற சமூகவலைத்தளங்களுக்கு அடிமை ஆகாமல் விளையாட்டு போன்றவற்றில் அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களை பெற்றோர்கள் கனிவுடன் கவனித்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்பதே காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்