'5 வயதில் பறிபோன பார்வை'... 'அப்பாவுக்கு இருந்த வைராக்கியம்'... 'துரத்திய தோல்விகள்'... ஐஏஎஸ் தேர்வில் வென்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த மதுரை பொண்ணு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

என்னால் எதுவும் சாதிக்க முடியாது, எனக்குள் திறமை ஒன்றும் இல்லை என புலம்புவார்களுக்கு, கடினமாக முயன்றால் அந்த வானத்தையும்  நமது கைக்குள் அடக்கலாம் என நிரூபித்து இருக்கிறார், மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி.

'5 வயதில் பறிபோன பார்வை'... 'அப்பாவுக்கு இருந்த வைராக்கியம்'... 'துரத்திய தோல்விகள்'... ஐஏஎஸ் தேர்வில் வென்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த மதுரை பொண்ணு!

மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ஆவுடைதேவி. முருகேசன் மார்க்கெட்டிங் பணி செய்து வரும் நிலையில், இந்த தம்பதியரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி, வாழ்க்கையே முடங்கி விட்டது எனச் சோர்ந்து இருக்காமல், தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தனது பணிகளைத் தொடர ஆரம்பித்தார். படிப்பில் படு சுட்டியான பூரண சுந்தரி, 10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர், கல்லூரியில் ஆங்கில இளங்கலை இலக்கியம் படிப்பையும் முடித்தார்.

வீட்டில் வறுமை சூழ்ந்த நிலையிலும், தந்தை கஷ்டப்பட்டு தன்னை படிக்கவைப்பதை மனதில் நிலையாக நிறுத்திக்கொண்ட அவர், கடினமாகப் படித்து அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பூரண சுந்தரியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. அவரது தந்தை முருகேசனும் மகள் ஆசைப்பட்டதை போல பூரண சுந்தரியை அரசு வேலையில் அமர்த்தி விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்துள்ளார். கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார்.

ஆனால் தான் எழுதிய பல தேர்வுகளில் பூரண சுந்தரி தோல்வி அடைந்த நிலையில், தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4-வது முறையாகக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, நேற்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

தனது வெற்றி குறித்துப் பேசிய பூரண சுந்தரி, ''தான் ஒரு பார்வை மாற்றுத் திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய, சந்தித்த சவால்கள் அதிகம் எனக் கூறியுள்ளார். தனது வெற்றிக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டும் காரணமல்ல எனக் கூறும் பூரண சுந்தரி, வெற்றிக்குப் பின்னால் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தான் இந்த நிலையை அடைய உறுதுணையாக இருந்தவர்களை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறும் பூரண சுந்தரி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் படித்தபோது, அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் என்றுமே மறக்க முடியாது எனக் கூறியுள்ளார். சிறு வயது முதல் தனது அம்மா சொல்லித் தரும் பாடங்களை கற்று வந்த தமக்குப் போட்டி தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும்'' கூறியுள்ளார்.

பணியில் சேர்ந்த பின்பு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, விளிம்பு நிலை மக்களுக்கு அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது தான் தனது முதல் பணி எனக் கூறியுள்ளார். மேலும் மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் முயன்றால் எப்போதும் வெற்றி நிச்சயம் எனக் கூறும் பூரண சுந்தரி, முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை என்பதற்குச் சான்றாக நிமிர்த்து நிற்பதோடு,

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்ற குறளுக்குச் சான்றாக நிற்கிறார் பூரண சுந்தரி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்