தென்காசியில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசியில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் வழக்கை முடித்து வைத்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

Advertising
>
Advertising

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிருத்திகா என்ற இளம்பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது பற்றி வினித் தரப்பில் புகார் ஒன்றும் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்படி இருக்கையில், கிருத்திகாவின் வீடியோ ஒன்று  வெளியாகி இருந்தது. அதில், தான் பாதுகாப்பாகவும், நன்றாக இருப்பதாகவும் கிருத்திகா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கிருத்திகாவின் பெற்றோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து வினித்தும் தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்கும்படி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் கிருத்திகா கடந்த 11 ஆம் தேதி ஆஜர் ஆனார். அப்போது கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கவும் விரிவான விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். கவுன்சிலிங்கிற்கு பிறகு செங்கோட்டை நீதிமன்றத்தில் கிருத்திகா வாக்குமூலம் கொடுத்தார். இது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகளிடத்தில் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கிருத்திகா யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடன் செல்லலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அப்போது அரசு தரப்பில் கிருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் உறவினர்கள் அஃபிடவிட் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் கிருத்திகாவை அழைத்துச் செல்ல அவரது தாத்தா பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கிருத்திகாவை அவருடைய தாத்தாவுடன் அனுப்பினால் விசாரணை பாதிக்கும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் கிருத்திகாவை அவருடைய தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, கிருத்திகா யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கிருத்திகாவை அழைத்துச் செல்பவரே அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அப்போது கேரளாவில் உள்ள ஹரிஷ் என்ற உறவினருடன் செல்ல விரும்புவதாக கிருத்திகா எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருடன் கிருத்திகா செல்லலாம் எனவும் வினித் சம்பத்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

TENKASI, KIRUTHIGA, MADURAI, HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்