டிவி சீரியல்கள் ‘தவறான உறவுகள்’ பத்தியே வருது.. இதுக்கெல்லாம் ‘சென்சார்’ கிடையாதா?.. நீதிபதிகள் சரமாரியாக கேள்வி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தவறான உறவுகள் குறித்தே சித்தரக்கிறது. இதற்கு தணிக்கைக்குழு ஏதும் கிடையாதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக நீதி பண்பாட்டு மைய செயலர் பெருமாள் ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.

அதில், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ். அவரது ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தின் டீசர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக விதமாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதில் இருக்கும் வசனங்கள் ஆபாசமாகவும், கேட்போர் முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. அதற்கான போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் படிப்பதற்காக அதிக அளவில் இணையத்தை சார்ந்திருக்கும் சூழலில் இதுபோன்ற திரைப்படத்தின் டீசர் இணைய தளத்தில் வெளியானது ஏற்கத்தக்கல்ல. பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களும் வருகின்றன. ஆனால் ஒரு சிலர் வணிக நோக்கில் மிக ஆபாசமான விஷயங்களை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்படங்களை எடுக்கின்றனர்.

இவை சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. அதனால் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசன் மற்றும் போஸ்டர்களை உடனடியாக அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, அந்த காலத்தில் “பாசமலர்” போன்ற குடும்ப உறவுகளையும், நாட்டுப்பற்றை வளர்க்கும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய படங்களில் ஆபாசம் மற்றும் வன்முறையை பரப்புவதாகவே உள்ளது. தகாத வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவற்றை பெரும்பாலான படத்தில் வைத்து விளம்பரத்தை தேடுகின்றனர்.

அதேபோல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ஆபாச பேச்சுக்கள், தகாத உறவுகள் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. இதற்கு தணிக்கைக்குழு ஏதும் கிடையாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி பயின்று வரும்போது, இதுபோன்ற டீசர்கள் வந்தால் வளரும் பருவத்தினர் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் ‘இரண்டு’ என்று இணையத்தில் தேடினால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் மனநிலையை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என தெரிவித்தனர். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் YouTube, Facebook, Google நிறுவனத்திற்கும், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும், மத்திய தணிக்கை குழு மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப துறையை எதிர் மனுதாரராக இணைத்து அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டருக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்