பயணிகள் மனதில் இடம்பிடித்த ‘மதுரை’ விமான நிலையம்.. இந்திய அளவில் கிடைத்த ‘சிறப்பு’ அங்கீகாரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் விமான நிலையங்களில் பட்டியலில் மதுரை விமான நிலையம் 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

இந்திய விமான நிலையங்களின் சேவை குறித்து ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு நடத்துகிறது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 5 மதிப்பெண்ணுக்கு 4.84 மதிப்பெண் பெற்று உதய்பூர் விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்தது.

இதனை அடுத்து மதுரை விமான நிலையம் 4.80 மதிப்பெண் இரண்டாம் இடம் பிடித்தது. விமான இயக்கங்கள் குறித்த அறிவிப்புகள், வாகன நிறுத்துமிட வசதி, பயணிகள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கான டிராலி இருப்பு, பணியாளர்களின் கனிவான உபசரிப்பு, செக் இன் செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை, காத்திருக்கும் நேரம், விமான நிலையத்திற்குள் வழிகளை கண்டறிவது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறிய மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், ‘கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மதுரை விமான நிலையம் பல்வேறு அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. ஆனாலும் ஒருசில விஷயங்களில் சிக்கல்கள் உள்ளன. உணவு உண்பதற்காக வசதி, பாதுகாப்பு சோதனையில் தாமதம், உடமைகளை ஒப்படைப்பதில் தாமதம் ஆகியவை சரி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்த குறைகளும் சரி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு மதுரை விமான நிலையம் பயணிகள் சேவையில் முதலிடம் பிடிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாரம்பரிய முறையில் பயணிகளை வரவேற்று உபசரிக்கும் திட்டமும் உள்ளதாகவும், அது நடைமுறைப்படுத்த பட்டால் பயணிகள் மேலும் திருப்தி அடைவார்கள் என்று செந்தில் வளவன் தெரிவித்தார். அதேபோல் மதுரையின் வரலாற்று சிறப்பம்சங்கள், சுற்றுலா பெருமைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய வீடியோக்களை பயணிகள் காத்திருக்கும் இடங்களில் ஒளிபரப்பி அவர்களை மகிழ்விக்கும் திட்டமும் உள்ளதாக மதுரை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விமான நிலைய நிர்வாகத்தின் சேவையை ஆதரித்த அனைத்து பயணிகளுக்கும் அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்